எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
கடந்து போகும் காலத்தோடு...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-12-03
வானம்பாடி (முஜா)
இளமையின்
தளிரான பொழுதுகளை எண்ணியபடி
உதிர்ந்து கொண்டிருக்கிறது
காலம்

ஏன் இப்படி
நேற்றுவரை அதன் பசுமை
மிரட்சிக்குள் 
கால் முளைத்த
ஆயிரம் சந்தோஷங்களை
கலைத்துப் போட்டிருக்கிறதேயென

அங்குமிங்கும்
அலைந்து திரிந்து
எல்லாம் தாண்டி
சிதறிய தடயங்களை கோர்த்துப் பார்க்கிறேன்

அத்தனை புதுமைகளுக்கு பின்னரும்
எனை விடுத்து 
எல்லாமே பூத்துக் கிடக்கின்றன
கவிதைகளாகி,
இப்போது 
தனியே அமர்ந்து
காலத்தை வெறித்தபடி
வினாவத் தொடங்கினேன்

அதுவும் அமைதியாய் 
என் கூனிய முதுகை
கடக்கும் முயற்சியோடு
சொல்லிப் போனது
விதிமீறல் உனக்கும் இல்லையென

🥀முஜா