எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
வானும் அதை வரையும் சிறகுகளும்...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-10-22
வானம்பாடி (முஜா)
சொல்வனத்தில்
கோடையைக் கொண்டாடும்
அவளுக்கென ,
ஒரு வானும் 
அதை வரையும் சிறகுகளையும்
தேடிக் கொள்கிறாள்

அந்தச் சிறகுகள்
நீளும் பெருங் கோடையில்
மழை வேண்டித் தவித்திருக்கும்
தன்னைப்போன்ற சீவன்களுக்காய்

இதம் தரும் 
மழைமேகங்களையும்
பொங்கிச் சிரிக்கும் ஓடையின்
சிறு சலசலப்பையும்
மொட்டு விரிதலுக்காய் காத்திருக்கு பட்டாம் பூச்சிகளையும்
மற்றும் 
வாடாத 
வடிவான பூக்களையும்
 வரையும் நிறைவாக

இன்னும் அது
வந்து வந்து விசாரித்துச் செல்லும் கனமற்ற வெயிலையும்
உள்ளம் பூக்கும் 
பெரும் வசந்தத்தின் கனி காய்த்தலையும் கொண்டுவர

அந்த வானின் பக்கமெல்லாம்
எரிக்காத சூரியனும்
 முழுநிலவின் விம்பங்களுமே 
வரையப்பட்டிருக்கும்
இருந்தாலும் ,

அவளது சாபச்சுமை  
விடுமுறைகள் தராக்
கூடாதென
இன்னும் ,
எத்தனை கோடைகளை அவ்வனத்துள் நிரப்பி பொழியக் காத்திருந்தாலும்

அந்த வானும் சிறகும் 
ஓயாமல்
சிற்றோடை பெரும் நதி
இளம் காற்று  
தாழப்பறக்கும் தட்டானென
வசந்தங்களை 
வரைந்தே  மகிழ்விக்கும்.

வானம்பாடி.