சமூகக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
கொடூர மவுனமும் இன்னும் சில நினைவுகளும்...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-10-18
வானம்பாடி (முஜா)

மாறிப் போய்விட்டேன்
என்கிறார்கள் ....

எப்படி....?
என  வினாவினேன்
முந்தியது போல
முகம் கொடுப்பதில்லையெனவும்
 கைகுலுக்க நினைக்கையில் 
தடுமாறி நிற்பதாகவும்
கூறுகின்றார்கள்.

எப்படிக் கூறுவது...? 
உங்களால் முயன்று 
பல முறை  
காயங்கள் சுமந்த
அந்தக் கிராமத்து முகம்   இப்போதும், 
அழியா வடுவாய் 
மனதில் நிற்பதையும்

இனியும்
மீட்படைதல் கூடாதென  வீழ்த்தப்பட்டு ,
தரையுதிர்ந்த 
மழலைப் புன்னகை
இன்னமும்  ,
பொன்னிறப் பூக்களாய் நிரம்பி வழிதலையும்

போதும் விட்டுவிடுங்கள்
அந்த மஞ்சளேறிய கணங்கள்
இன்னும் 
வெந்து தணியாமல்
கொடூர மவுனமாய்

அதன்
அவலத்துடிப்பை வெளிக்காட்ட முடியாது
மறைக்கும் இடம் வேண்டி
போராடித் தோற்றிருக்க
 
இந்தமுறை என்
பழக்கங்களை மாற்றிக் கொள்கிறேன்
மறுபடியும்
உங்கள் விரல் நீளாத் தூரத்தில்
உகந்ததொரு முகம் வேண்டியவளாக

விழுந்த காலம் பற்றிய
எண்ணங்களோடு சற்று,
சிரித்துக் கொள்கிறேன்
இப்போதேனும் விட்டுவிடுங்கள்
அந்த முகம் 
இயல்பாக இருக்கட்டுமே!

வானம்பாடி.