ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
தழும்புகளின்_உலகிலிருந்து

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-09-23
வானம்பாடி (முஜா)
தழும்புகளின்_உலகிலிருந்து

தழும்புகளின் உலகை
மீண்டுமொருமுறை 
திறந்து பார்க்க
ஆசை கொள்கிறேன்

அவை...
நிழல் குடையொன்றை
ஏந்தக் கேட்டு
வருத்தங்களை  தருவித்த
அன்பின்  பாரங்களாகவோ.

இதய நரம்பை 
அறுக்க வேண்டுமென்றே 
நிகழ்த்தப்பட்ட
துரோகத்தின் அரைகுறை  முகவுரையாகவோ

அல்லது
பலம் கொண்ட மட்டும்
அடைய எத்தனித்து
 கிடைக்காமல் போன
கனவுகளின்  வடிவமாகவோ

காலப்பொழுதில்
அடையாளங்கள்  கூடாதென
காணாமலாக்கப்பட்ட 
உறவொன்றின்
உருக்குலைவாகவோ

வார்த்தைகள் 
வணங்க மறுக்க
உறவின் மகிழ்வு
உடையக் கூடாதெனச் சிரம்தாழ்த்திய பொழுதொன்றின் புலம்பலாகவோ

அதன் ஓசை உபாதைகள் 
இதுவரை நோவினை தந்து போதுமென 
அவைகளுக்கு
விடுதலை வழங்கவே
இந்தப் புதிய முயற்சி 

முடிந்தால் அவையும்
கற்பூரம் போல 
காற்றில் கரைந்தே வாசம் 
வீசட்டும்
இல்லை
மீண்டுமொருமுறை 
வாள்முனை நீட்டி
போராட்டம் புரியட்டும் ,.

வானம்பாடி.