ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
முகம் விழிக்கா கனவுகளோடு..

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-09-23
வானம்பாடி (முஜா)
அடைகாக்க விரித்திருக்கும்
பறவையின்  சிறகாட்டம்
கனவுக் குழந்தைகளை
பொரித்தெடுக்க
காத்திருக்கிறேன்

வைத்த கனவுகளில்
ஓரிரண்டு 
நாள்படும்  முன்னரே 
சிறைப்பட விரும்பங்கள் இல்லையென விடைபெற...

இன்னும் சில  
அணைப்பில் அசந்திருந்து
விரல்களின் நீளமும்
நகங்களின் கோப்பும்
வளர மறந்த
பலவீன ஜீவனாக

மீந்து இருப்பவை மொத்தமும்
துடிக்கும் இதயம் 
உட் கசிய,
உரமளிக்கும்  
உறுதி தளர்ந்த
மரணக் குறிப்புச் சான்றுகளை விரும்பியபடி

இப்போது 
உறைநிலை இயல்பாகிப் போன 
பின்னரும்
அக் குழந்தைகளை தழுவ மறக்காத எந்தன் 
மென்மைப் பக்கங்களை உணரத் தவறிய
அடையாளங்களற்ற  கைகள்

பொரிக்காத கனவுகளின்
தாய் இவளென விரல் நீட்டுகின்றன,
நானும்
சற்றும் களைப்படையாமல்
இனியும் காத்திருப்பேன் 
முகம் விழிக்கா
என் கனவுகளுக்காய்...

வானம்பாடி.