கம்யூனிஸப்
பூச்சாண்டிகளால்
முறைதவறிக் காட்டப்படும்
கதையாடலின் உருவாக்கமே
எங்களின் கதை..
வெறுப்பும்
காழ்ப்புணர்வும் தலைக்கேறி
ஒரு பொய்யை
உண்மை போல்
திரும்ப திரும்பச் சொல்லி ;
எங்கள்
தொப்பிக்கும் தாடிக்கும்
புது அர்த்தம் கற்பிக்கும்
நவீன கதைசொல்லிகள்
தங்கள்
கற்பனைக்குத் தீனியிட்டு
மதங்களையும் மனிதத்தையும்
பிரித்தாளும் தந்திரமே
இஸ்லாம் குறித்த அச்சத்தை
விதைப்பது...
முரண்பாட்டுக்கும்,
மோதல்களுக்கும்
சுவாரஸ்யம் சேர்க்க
எங்கள் மதத்தின் பெயரும்
மார்க்க விழுமியங்களும்
இவர்களுக்கு தேவையாக...
எங்கள் சடங்குகளையும்
வழக்காறுகளையும்
அடையாளப்படுத்தி
கலாச்சார மோதுகையென்றும்
தேசிய அடையாளத்தின்
அச்சுறுத்தலெனவும் முத்திரையிட்டு,
எங்களின்
செரிமான மிச்சத்தைக்கூட
தொட்டு நக்கிப்பாக்கின்றனர்
சரணாகதியாக்க...
உண்ணும் தட்டுகளுக்குள்
தலைவிட்டு தலைக்கறியா இல்லை
குடல்கறியாவென குழியோடும்
இஸ்லாமிய வெறுப்பு ஆலையின்
கொள்கைப் பரப்பு செயலாளர்களே
இந்த சந்தர்ப்பவாதச் சாக்கடைகள்..
இவர்களது
இனமேலாண்மையின் உச்சம்
இவர்களின் தலைக்குள் ஓடும்
நண்டுகளாட்டம் ..
நாங்கள் பிறந்துவளர்ந்த நாட்டிலும்
எங்களின் பிறப்பு விகிதத்தைக்
கட்டுப்படுத்த வேண்டுமென்ற
வக்கிரச் சித்தாந்தத்தின்
தப்பும் தவறுமான
சித்தரிப்புகளால்
எங்களின் வேதநூல்
உச்சாடனம்கள் கூட இன்று,
தீவிரவாதச் சாயம் பூசப்பட்டு
கோயாபல்களினால் உண்மையென
வாதிடப்படுகின்றன...
செய்தித் தணிப்புகளுக்கும்
அவர்களது
அரசியல் நாடகங்களுக்கும்
மட்டுமல்லாது,
பின்னடைவுகளை சரிசெய்யும்
கவனக்கலைப்பானாகவும்
தேவை நாங்களும்
எங்கள் மத்திரிஸாக்களும்
நின்று நிதானித்து
இலக்குவைத்து
ஆடை முதல் கடைசியாக
பேரித்தம் மரம் வரை
உளவியல் ரீதியாகவும்
கலாச்சார யுத்தமெனவும்
பிரகடனப்படுத்தி
கழுத்தைத் துருவியெறியும்
அரக்கர்கள் இவர்கள்..
உயிர் நசுங்கும் ஓலத்தை
ரசித்தபடி..
கடைவாய்பல்லிருந்து
வழியும் ரெத்ததுளிகளை
சுவைத்துப் பருகும்
சாத்தான் ஓதும் வேதவரிகளே
"இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது"...
வானம்பாடி ( முஜா)
* இஸ்லாமோ போபியா - இஸ்லாமியப் பீதி
* கோயாபல்ஸ்- சர்வாதிகார ஹிட்லரின் பொய்களை அழகாக்கி மெய்யென வாதிடும் அபாரப் பேச்சாளர்...
* வேதநூல் உச்சாடனம்-வேத நூலை முறையாக உச்சரித்தல் (இங்கு இஸ்லாமிய வேதநூல் குர்ஆன் பற்றிக் குறிப்பிட்டேன்...
© 2023 ThoorigaiKadhal. All Rights Reserved
Solution by
Syntaks.