கிளைகள் பரப்பி
குஷியாய் வாழ்ந்த பூமியில்,
இன்று நான்
காலாவதி ஆகிவிட்டேனாம்
கவனிப்பார் அற்று
கிடையில் கிடக்கும்
கிழட்டு முண்டமென்ற
அவப்பெயருடன்
நினைவுகளை நனைக்கும்
ஞாபக எச்சங்கள்
மனதைவாட்ட...
என்னுடன் கதை பேசும்
உறவொன்றைத் தேடி
நிற்கிறேன்
என் விரலிடுக்கில்
முளைத்து நிற்கும்
நாத்துக்கள் கூட
என்நேசப் பூக்களின்
வாசம் பார்க்க
நேரமின்றிக்கடக்க
என் வெறுமை நாட்களை
விரட்டவென தோழமையானது
நரை திரை மூப்போடுசேர்ந்து
மருந்தும் மருத்துவனுமே.....
நலன் விசாரிப்புக்கள் பலவும்
கனவாகிப்போக
மனக்கனியின் விருந்தை
உண்டுகழிக்கும் எனக்கு
என் சுய கழிவிரக்கம் கூட
பெருஞ் சுமையாய்
இமையடைத்த
என் காத்திருப்புக்கள்
சின்னச் சின்னவருத்தங்களாய்
உயிரைத் தின்று குடிக்குது
இறுதிநாளை வேண்டிய
காத்திருப்புடன்
இன்றும் என் பிரார்த்தனை
உங்களுக்காய்...
நீங்களும் காலத்தால்
கனிவீர்கள்
என்னைப் போல்...
அன்று....
முதுமையின் வாசல்
அமைதியோடும்
அரவணைப்போடும்
உங்களை
கலவரப்படுத்தாது
கௌரவப்படுத்தி வழியனுப்ப
வேண்டுமென்பதே....
வானம்பாடி ( முஜா)
© 2023 ThoorigaiKadhal. All Rights Reserved
Solution by
Syntaks.