முயற்சிகள் திருவினையாக
முகம்சுழிக்காது முயலும்
முறுக்குமீசைஇதயம் அவன்
அன்பினால் வளைத்தால்
ஆரத்தழுவுவான் வாஞ்சையோடு
அல்லலுறும் பொழுதுகளில்
அன்னைமடியாகும்
அற்புதமும் அவன்
கனவுகளை மறைத்து
உணர்வுகளை
காணிக்கையாக்கி
கனக்கும் குடும்பச் சுமைகளைக்
காணாமலாக்கும் கருமவீரன்
பட்டினித் தவமிருந்து
பட்டை தீட்டிய வரம் கொடுப்பான்
பட்டம் பதவி இவைக்குள்ளும்
பாவைபோல் குடும்பம்காப்பான்
காலுடைந்த தேவதைக்கும்
கள்ளிப்பால் கொடுக்காமல்
கங்கணம் கட்டிக் கரைசேர்க்கும்
காவல்வீரனும் அவன்...
பெண் தேவதைகளின்
பொட்டுச் சிறகு விண்ணைத் தொட
மென்மை பேணி பெறுமையோடு
தன் சிறகைத் தானம் வழங்கும்
வள்ளலும் அவன்..
உறவுகளைப் பதியமிட்டு
உழைத்து வாழும்
உழவனின் திடம் கொண்ட
உற்றதுணையான்...
அவன்
நெற்றி வியர்வையில்
தொட்டில்கட்டி மகிழும்
குடும்ப உறவுகளின் கனவுக்காய்
விருப்பங்கள் கொன்று
மனதுக்குள் வருந்தி வாழும்
சுயநலமில்லா மனிதனும் அவன்
வானம்பாடி ( முஜா)
© 2023 ThoorigaiKadhal. All Rights Reserved
Solution by
Syntaks.