சித்தாத்தனின்
சிந்தனைகளை சீரழித்த
சிங்கதேசத்து சில்லறை அரசியல்
மதவாதத்தைத் தூண்டி
மனிதத்தை
மறக்கடிக்கச் செய்து
ஓட்டுக்காக
ஒரு சாம்பல் தேசத்தை
ஈன்றெடுக்கின்றது
அஹிம்சாவாதிகளெனும்
அடையாளத் தோடு
அறம் தொலைத்த
அதிகாரக் கடவுளர்களின்
அறிவு வற்றல் நிரம்பிவழியும்
ஆச்சரியப் பூமியானது
பார்வைக்குப் பழமாகி
குணம்கெட்டு
குரல்களைக் கடித்துப்பும்
சதிகாரர்களின்
புன்னகையும்
சாந்தமுகமும்
பெற்றுத்தந்ததெல்லாம்
வலியும் கண்ணீருமே
செம்பு தூக்கிகளின்
கைதூக்குதலில் செழிப்பாய்
தொட்டிலிட்டு ஆடும்
சந்தர்பவாதச்
சூட்சுமங்கள்
கண்டெடுத்ததெல்லாம்
ரத்தம் துவைந்த
தூக்குக்கயிறுகளையே
ஒருசமூகத்தின் விடுதலையை
முடமாக்கி
கருத்துவேறுபாடெனும்
கறையான்களை
கட்டவிழ்த்து விட்ட
ஆதிக்க அரசியல்
துயருற்ற சமூகத்தை
தடியால் அடித்துக் கொன்று
நொறுங்குண்ட மனிதனை
நெருப்பில் போட்டெரிக்கும்
பொல்லாத மனிதர்களின்
ஆடுகளமாய்...
சிவப்போ, சாயமோ
எதுவந்தபோதும்
பிழைத்தலின்றி நானும்
பொறுமையுடன்
நலிந்துபோய்ப் பார்க்கிறேன்
இந்த அரசியலில்
நல்லிணக்கத்தையும் காணோம்
நல்லாட்சியையும் காணோம்...
வானம்பாடி ( முஜா)
© 2023 ThoorigaiKadhal. All Rights Reserved
Solution by
Syntaks.